02-05-2009

நாற்கொம்பு மான்

நாற்கொம்பு மான் (Tetracerus quadricornis)தெற்காசியாவின் திறந்த வெளி காடுகளில் வாழ்ந்து வரும் ஒரு மான் இனமாகும். இவ் இனத்தின் பெரும் பகுதி இந்தியாவிலும் ஒரு சிறு பகுதி நேபாளத்திலும் வாழ்ந்து வருகின்றது. இம் மானுக்கு இந்தியில் " சௌசிங்கர்' என்று பெயர். அதன் அர்த்தம் " நான்கு கொம்புகள்" ஆகும்.

நாற்கொம்பு மான் போசிலாபினி எனும் குலத்தைச் சேர்ந்த விலங்காகும். இக் குல உயிரினங்கள் பெரும்பாலானவை அழிந்து போய்விட்டன. எஞ்சி இருப்பது நாற்கொம்பு மானும், நீல மானும் மட்டுமே. இவ் மானின் 4 கொம்புகளே மற்றைய மான்களில் இருந்து இதனை வேறுபடுத்துகின்றன. இதன் பழக்க வழக்கங்களும், உடலமைப்பும் கூட மூதாதைய இனத்தை சார்ந்தவையாகவே இருக்கும். இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் அங்கும் பெரும் தொகையாக இல்லாமல் சிறு தொகையே வாழ்ந்து வருகின்றது. உலக் காடுகளிலே இம் மான் இனம் வாழ்ந்து வருகின்றது.


நாற்கொம்பு மானின் உடலமைப்பு மற்றைய மான்களை போல் இருந்தாலும் வளைவுகள் இல்லாத நான்கு கொம்புகளும் புள்ளிகள் இல்லாத தோலமைப்பும் இவற்றின் சிறப்பம்சமாகும். பெண் மான்களுக்கு கொம்புகள் காணப்படாது. இவற்றின் கர்ப்பகாலம் 8 மாதங்கள் ஆகும். பிறந்து சில மாதங்களிலேயே பின் புற கொம்புகள் முளைக்க தொடங்கி விடும். முன் புற கொம்புகள் 14 - 15 மாதங்களின் பின்னே வளர தொடங்கும்.முன் கொம்புகள் சிறியதாவும் பின் கொம்புகள் பெரியதாவும் காணப்படும்.

இது மிகவும் கூச்ச உணர்வு கொண்ட விலங்காகும். ஆபத்தை உணர்ந்தால் புற்கள் மரங்களுக்கு பின் சென்று பதுங்கி கொள்ளும். இவை அதிகமாக நீர் உள்ள இடங்களிலேயே வாழும் ஏனென்றால் இவை மிக அதிகமாக நீர் பருகும் தன்மை கொண்டவை. இவ் அபூர்வமான மானின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகளே ஆகும்.
 

சாரல் © 2008. Template Design By: SkinCorner